பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமனம் விவகாரம்.. ஆட்சேர்ப்பு ஊழலில் இருந்து திசை திருப்பும் தந்திரம்.. கவர்னர் குற்றச்சாட்டு

 
போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்

கவர்னருக்கு பதிலாக முதல்வர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்கப்படுவார் என்ற மேற்கு வங்க அரசின் அறிவிப்பு, ஆட்சேர்ப்பு ஊழலில் என்ன நடக்கிறது என்பதில் இருந்த கவனத்தை திசை திருப்பும் தந்திரங்கள் என அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டினார் 

மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அண்மையில், கவர்னர் மாளிகை அனுமதியின்றி மாநில அரசு பல துணைவேந்தர்களை நியமித்துள்ளதாக கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டியிருந்தார். மேற்கு வங்கத்தில் தற்போது உள்ள அரசு நடத்தும் 17 பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் வேந்தராகவும் உள்ளார்.

மம்தா பானர்ஜி

இந்நிலையில் கடந்த வாரம் மேற்கு வங்க கவர்னருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமிக்கப்படுவார் என அம்மாநில அரசு அறிவித்தது. இதன்படி, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்கு வங்கத்தில் கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளது. 25 துணைவேந்தர்கள் சட்டத்துக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ளனர். கவர்னரின் பங்கை குறைக்க முடியுமா என்பதை நான் ஆராய்வேன். இவை (எஸ்.எஸ்.சி.) ஆட்சேர்ப்பு ஊழலில் என்ன நடக்கிறது என்பதில் இருந்த கவனத்தை திசை திருப்பும் தந்திரங்கள் என தெரிவித்தார். பள்ளி ஆட்சேர்ப்பு ஊழலில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்கிறார்.