சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக விஷாலை களமிறக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

 
vi

தமிழகத்தில் நடிகர் சங்கத் தேர்தல்,  தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி கண்ட விஷால் அடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார்.   ஆனால்  முறையான வேட்புமனு தாக்கல் செய்யாததால் அந்த தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போனது.  அத்தோடு அவர் அரசியல் பக்கம் திரும்பவே இல்லை.  இந்த நிலையில் அவர் திடீரென்று ஆந்திர அரசியலில் குதிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் பரவுகிறது.  அதுவும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போவதாக தகவல்கள் வருகின்றன.

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நடிகர் விஷாலை களம் இறக்க முடிவு செய்து இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி என்று தகவல் பரவுகிறது.

ja

ஆந்திர மாநிலத்திற்கு வரும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.  தேர்தல் வியூகத்தை இப்போதிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்  சந்திரபாபு நாயுடு,  குப்பம் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.   வரும் தேர்தலிலும் அவர் இதே தொகுதியில் நிற்கப் போவதாக தகவல்.   இதனால் அந்த தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்து இருக்கிறார்.

 இதனால் குப்பம் பகுதியில் யாரை நிறுத்தலாம் என்று ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி வந்த போது சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் புங்கனூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் மாநில அமைச்சருமான பெட்டி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி நடிகர் விஷாலின் பெயரை பரிந்துரைத்திருக்கிறார் .  விஷாலுக்கு நன்கு அறிமுகமான பகுதி குப்பம் தொகுதி. 

 ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள இந்த தொகுதி தமிழக எல்லையை ஒட்டி இருக்கிறது.   கர்நாடக கே ஜி எஃப் இல் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த தொகுதி  இருக்கிறது.   மூன்று மாநிலங்களுக்கும்  அறிமுகமானவர் விஷால் என்பதாலும்,  விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி இந்த பகுதியில் தான் கிரானைட் குவாரிகள் நடத்தி வந்திருக்கிறார்.   சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக விஷால் தந்தையின் கிரானைட் தொழிலை கவனித்து வந்திருக்கிறார்.   குவாரி தொழிலால் இந்த பகுதி மக்களிடையே விஷாலுக்கு நன்கு அறிமுகம் இருக்கிறது.

 சினிமா பலம்,  இந்த தொகுதி மக்களின் அறிமுக பலம் இரண்டும் சேர்ந்து விஷாலுக்கு இருப்பதால் விஷாலை அந்த தொகுதியில் நிறுத்தலாம் என்று அவர் சொல்ல அது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசித்து வருகிறாராம்.  இதற்கு விஷால் என்ன சொல்ல போகிறார்?என்றும் பரபரப்பு எழுந்திருக்கிறது.