கடினமான காலங்களில் துடிப்புடன் பணியாற்றினார்.. ஜே.பி. நட்டாவை பாராட்டிய அமித் ஷா

 
ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் 2024 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா அறிவித்தார்.


தலைநகர் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. மையத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வின் 2 நாள் செயற்குழு கூட்டம் தொடங்கியது. பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டத்தின் கடைசி நாளான நேற்று, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் வரை நீட்டிக்க செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஜே.பி. நட்டா 2019ல் பா.ஜ.க.வின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். 2020ல் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைவதாக இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டில் கர்நாடகா, திரிபுரா உள்பட ஒன்பது மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் 2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்,  ஜே.பி. நட்டாவின் பதவி காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அமித் ஷா
எதிர்பார்த்தது போலவே, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு நட்டாவின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது. பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இது  தொடர்பாக அமித் ஷா கூறியதாவது: பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் 2024 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நட்டா கோவிட் பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் (பா.ஜ.க.வின்) தலைவராக ஆனார். அவர் கடினமான காலங்களில் துடிப்புடன் பணியாற்றினார். 

பா.ஜ.க.

ஜே.பி.நட்டாவின்  தலைமையின் கீழ், பீகாரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் பெற்றோம்.  பிறகு மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை அமைத்தோம். ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வெற்றி  பெற்றோம். கோவாவில் நாம் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளோம். கோவாவில் முதல் முறையாக பெரும்பான்மை பெற்றுள்ளோம். குஜராத்தில் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளோம். ஜே.பி. நட்டாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சமீபத்திய குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்று வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.