எமர்ஜென்சியின் இருண்ட நாட்களில் நாட்டின் ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் திட்டமிட்டு அழித்ததை முடியாது.. பா.ஜ.க.

 
இந்திரா காந்தி

எமர்ஜென்சியின் இருண்ட நாட்களில் இந்தியாவின ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு அழித்ததை ஒரு போதும் மறக்க முடியாது என பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

1975 ஜூன் 25ம் தேதி முதல் 1977 மார்ச் 21ம் தேதி வரையிலான 21 மாதங்கள் நம் நாட்டில் அவசரநிலை (எமர்ஜென்சி) அமலில் இருந்தது. அப்போது பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் உள்நாட்டு குழப்பங்கள் காரணமாக அவசரநிலையை குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அறிவித்தார். அவசரநிலை இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமாகும். அவசர நிலை காலத்தில்,அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டன, ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டன மற்றும் சிவில் உரிமைகள் மீதான ஒடுக்குமுறை பொதுவானது.

உச்ச நீதி மன்றம்

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை செய்தததாக, அவரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிஸ்ட் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம், ஆறு ஆண்டு காலத்துக்கு இந்திரா காந்தி போட்டியிட தடை விதித்தது. இதனை தொடர்ந்து இந்திரா காந்தி பதவி விலக்கோரி போராட்டங்கள் தொடங்கின. ஆனால் இந்திரா காந்தி பதவி விலகவில்லை. அதேசமயம் இந்திரா காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சில நிபந்தனைகளுடன் அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது. அதேசமயம், இந்திரா காந்தி பதவி விலகக்கோரி கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து ஜூன் 25ம் தேதி இரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது.

ஜே.பி.நட்டா

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் 46வது ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இது தொடர்பாக கூறுகையில், எமர்ஜென்சியின் இருண்ட நாட்களில் இந்தியாவின ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு அழித்ததை ஒரு போதும் மறக்க முடியாது. இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க போராடிய மாவீரர்களை இன்று  நாம் நினைவு கூறுகிறோம் என தெரிவித்தார்.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர் ஹமிந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், 1975 இந்த நாளில் அவசரநிலை, இந்தியாவின் ஜனநாயகத்தின் பயங்கரங்களையம், இருண்ட நாட்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. கரகரப்பாக அழுபவர்களும், அபாயகரமான ஜனநாயக கதைகளை புனைந்து பேசுபவர்களும் வரலாற்றின் பக்கங்களை  புரட்ட வேண்டும். என பதிவு செய்து இருந்தார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், 1975 ஜூம் 25ம்  தேதியன்று ஒரு சர்வாதிகார, பாதுகாப்பற்ற மற்றும் அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர் சிவல் உரிமைகளை குறைத்து, ஜனநாயக நிறுவனங்களை தகர்த்து அவசரநிலையை விதிக்க நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார் என தெரிவித்தார்.