மோடி இந்திய அரசியலின் கலாச்சாரத்தை மாற்றியுள்ளார், அரசாங்கத்தின் பணி முறையும் இன்று மாறி விட்டது... ஜே.பி. நட்டா

 
மோடி

பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை குறிப்பிட்டு, பிரதமர் மோடி இந்திய அரசியலின் கலாச்சாரத்தை மாற்றியுள்ளார். அரசாங்கத்தின் பணி முறையும் இன்று மாறி விட்டது என ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற அமிர்த மஹோத்சவையும் இன்று கொண்டாடுகிறது, இன்று நாடு மோடி அரசாங்கத்தின் 8 ஆண்டுகளையும் கொண்டாடுகிறது.  சேவை, நல்லாட்சி மற்றும் ஏழை நலன் இவைதான் மோடி அரசின் செயல்பாடுகள். இவை மோடி அரசின் ஆன்மாவாகும்.

ஜே.பி.நட்டா

பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலின் கலாச்சாரத்தை மாற்றியுள்ளார். அரசாங்கத்தின் பணி முறையும் இன்று மாறி விட்டது. 2014ல் இருந்து தற்போது வரை நாம் வெகுதூரம் வந்து விட்டோம். இன்று நாம் நாட்டில் ஒரு பொறுப்பான அரசாங்கத்தை காண்கிறோம். இந்த மாற்றத்தின் கதை நமது முன்னேற்றத்தின் அடையாளம். நாம் அந்த்யோதயாவை (ஏழை) வேகமாக முன்னெடுத்து சென்றுள்ளோம். தேசம் பற்றிய நமது கொள்கைகள் அனைத்தும் முன்னோக்கி நகர்ந்துள்ளன. முன்பு காகிதத்தில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, காகிதத்தில் செயல்படுத்தப்பட்டு, காகிதத்தில் திறக்கப்பட்டன. இன்று திட்டங்கள் திட்டமிடல் முதல் செயல்படுத்துவதை கீழ்மட்டம் வரை கண்காணிப்பு செய்யப்படுகிறது.

பள்ளி

முந்தை அரசின் 70 ஆண்டுகளில் 6.37 லட்சம் தொடக்க பள்ளிகள் கல்வித்துறையால் கட்டப்பட்டன. ஆனால் மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் 6.53 லட்சம் தொடக்கப்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்கு பார்வையுடன் நாம் முன்னேறி வருகிறோம். கரிப் கல்யாண் அன்ன யோஜனா உலகளவில் பாராட்டப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில், சுகாதார பிரச்சினைகளை தீர்த்ததோடு, பொருளாதார விஷயங்களை தீர்த்துள்ள நாடு எதுவென்றால் அது இந்தியாதான். 2 ஆண்டுகளாக சுமார் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ இலவச ரேஷன்  வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மோடி அரசு மேற்கொண்ட பணிகள் உள்ளிட்டவற்றை ஜே.பி. நட்டா தெரிவித்தார்.