கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பினராயி விஜயன் அரசு ஊக்குவித்து வருகிறது.. ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

 

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: எல்.டி.எப். (முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி) அரசு நடுநிலையாக இருப்பது போல் பாசாங்கு செய்கிறது. ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அரசு ஊக்குவித்து வருகிறது என்று கூற விரும்புகிறேன். இஸ்லாமிய தீவிரவாதம் சி.பி.எம்.(எம்) அரசின் ஆதரவை பெற்று வருகிறது. 

பினராயி விஜயன்

கேரளா இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது. மாநிலத்தில் நடைபெற்று வரும் மக்கள் தொகை மாற்றங்களால் ஒட்டு மொத்த மக்கள் சங்கடமாக இருக்கின்றனர். நமது மத தலைவர்கள், குறிப்பாக கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள், இது போன்ற பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றனர். சமூகத்தில் நடக்கும் மக்கள் தொகை மாற்றத்தின் பிரச்சினையை ஏன் எழுப்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருள் ஜிகாத் குறித்தும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மாநில அரசாங்கத்தின் கொள்கை போலி மதச்சார்பின்மை. இது சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு சிறப்பு அணுகுமுறையை உள்ளடக்கியது. மாநிலத்தில் வன்முறை மற்றும் கொலைகளுக்கு மாநில அரசு நிதியுதவி செய்கிறது. ஜனநாயக முறையிலும், கூட்டுறவு கூட்டாட்சி முறையிலும் நாங்கள் போராடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம். சட்டம் அதன் போக்கை எடுத்துக்கொள்வதை நாம் பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.