காங்கிரஸின் போராட்டங்கள் உண்மையை மறைக்கும் முயற்சி... ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

 
ஜே.பி. நட்டா

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களை, உண்மையை மறைக்கும் முயற்சி என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்தார்.


நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். மூன்றாவது முறையாக நேற்று சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

இந்நிலையில் காங்கிரஸின் போராட்டங்களை உண்மையை மறைக்கும் முயற்சி என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்தார். ஜே.பி. நட்டா கூறியதாவது: ஒரு குடும்பம் (காந்தி) சட்டத்துக்கு மேலானது என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் இந்த நாட்டில் சட்டங்களும், விதிகளும் அனைவருக்கும் சமம் என்பதால் இது வேலை செய்யாது. சட்டத்தின் முன் அனைவரும் பதிலளிக்க வேண்டியவர்கள். விசாரணை நிறுவனங்களுக்கு காந்திகள் பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்.

காங்கிரஸின் போராட்டங்கள் உண்மையை மறைக்கும் முயற்சி. சட்டம் தன் கடமையை செய்கிறது. நாம் அனைவரும் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ஒருபுறம் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, மறுபுறம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சலசலப்பை உருவாக்குகிறது என தெரிவித்தார்.