பீகாரில் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா?.. நிதிஷ் குமார் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்- கே.சி. தியாகி

 
பா.ஜ.க.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார்  இன்று நடைபெறும் கூட்டத்தில்  எடுக்கும் எந்த முடிவையும்  ஐக்கிய ஜனதா தள கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக  கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது ஆளும் கூட்டணி கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனை உறுதி செய்வது போல் பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்து கொள்ளவிருந்த பல அதிகாரபூர்வ சந்திப்புகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார். குறிப்பாக   நிதிஷ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

ஆர்.சி.பி. சிங்

ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.சி.பி. சிங் பா.ஜ.க.வுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை என தகவல்.  ஆர்.சி.பி. சிங் கடந்த சில தினங்களுக்கு முன் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில்,  இன்று நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

நிதிஷ் குமார்

இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வுடன் கூட்டணியை தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தொடருமா என்பது இன்று தெரிந்துவிடும் என ஒரு சாரர் கூறிவருகின்றனர். ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் நிதிஷ் குமார் எடுக்கும் எந்த முடிவையும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார்.