பா.ஜ.க.வில் இணைந்த ஐக்கிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள்.. கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பிரிக்கிறார்கள்... நிதிஷ் குமார்

 
பா.ஜ.க.

மணிப்பூரில் பா.ஜ.க.வில்  ஐக்கிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததை குறிப்பிட்டு, பா.ஜ.க.வினர் கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பிரிக்கிறார்கள் என்று நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார்.

மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இடம் பெற்று வருகிறது. மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 60 உறுப்பினர்களில் பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 55ஆக உள்ளது. முதல்வர் பைரன் சிங் தலைமையிலான அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் வெளியில் இருந்துதான் ஆதரவு அளித்து வந்தது. பீகாரில் அண்மையில் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்திலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறும் என பேச்சு எழுந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், கடந்த வெள்ளிக்கிழமையன்று மணிப்பூரில் மொத்தமுள்ள 6 ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.

இது தொடர்பாக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் கூறுகையில், நாங்கள் (ஐக்கிய ஜனதா தளம்) தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த போது, எங்களது 6 மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களும் வந்து எங்களை சந்தித்து, ஐக்கிய ஜனதா தளத்துடன் இருப்பதாக உறுதி அளித்தனர். என்ன நடக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பிரிக்கிறார்கள். இது அரசியலமைப்புக்குத் தக்கதா?. 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என தெரிவித்தார்.