தேவகவுடாவின் மதிப்பு உங்களுக்கு தெரியவில்லை என்றால் மோடியிடம் போய் கேளுங்கள்.. கர்நாடக பா.ஜ.க. தலைவரை தாக்கிய குமாரசாமி கட்சி

 
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தேவகவுடா….

தேவகவுடாவின் மதிப்பு உங்களுக்கு தெரியவில்லை என்றால் மோடியிடம் போய் கேளுங்கள் என்று கர்நாடக பா.ஜ.க. தலைவர் நளின் கடீலை மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் விமர்சனம் செய்துள்ளது. 

காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த தற்போது கர்நாடக அமைச்சராக இருக்கும் ஆனந்த் சிங் உள்ளிட்ட  கட்சி எம்.எல்.ஏ.க்களை  கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.  சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உடலை விற்கும் பெண்களை போல நடந்து கொண்டனர் என்று அவர் விமர்சனம் செய்தார். பி.கே.ஹரிபிரசாத்தின் விமர்சனத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்தது. 

நளின் குமார் கடீல்

இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க. தலைவர் நளின் கடீல் கூறுகையில்,  ஒரு தேசிய கட்சி (காங்கிரஸ்) சண்டைக்காக கையில் செருப்புகளை வைத்திருக்கிறது. ஆனால் ஒரு தந்தை-மகன் கட்சி (மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்)  அவற்றை ஒருவர் மீது ஒருவர் வீசுகிறது. எங்கள் (பா.ஜ.க.) சப்பல்கள் வெளியில் விடப்பட்டுள்ளன, எனவே அமைதியாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியில் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் அவரது சகோதரருக்கும் இடையே சீட் விநியோகம் தொடர்பான பிரச்சினையை மேற்கோள்காட்டி, அண்ணன் யார், தம்பி யார் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. தேசிய கட்சியில் அவர்கள் முதல்வர் பதவிக்காக உட்கட்சி பூசல்களில் ஈடுபட்டுள்ளனர் என நளின் கடீல் தெரிவித்தார்.

மதசார்ப்பற்ற ஜனதா தளம்

செருப்பை குறிப்பிட்டு பேசியதற்கு பா.ஜ.க. தலைவர் நளின் கடீலை  மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவகவுடாவின் (குமாரசாமியின் தந்தை) தூசுக்கு நீங்கள் மதிப்பில்லை. தேவகவுடாவின் மதிப்பு உங்களுக்கு தெரியவில்லை என்றால் மோடியிடம் போய் கேளுங்கள் என தெரிவித்துள்ளது. அதேசமயம், நளின் கட்டீலின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததோடு, அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.