ஆதி திராவிடர் வீட்டில் இடது கையால் விருந்து சாப்பிட்ட ஜேபி நட்டா! அனைத்தும் நாடகமா?
கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார்.
நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி- விஜயா தம்பதியினர் வீட்டில்தான் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை வந்துள்ள
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தகவல் தொலைதொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மூர்த்தி வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களை கிராம மக்கள் பூ தூவி வரவேற்றனர். மூர்த்தி மற்றும் விஜயா தம்பதியினரின் வீட்டுக்குள் தலைவர்கள் சென்றநிலையில், வீட்டின் உரிமையாளர்களான மூர்த்தி- விஜயா தம்பதியினரையே பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டுக்குள் அனுமதிக்காமால் நிறுத்திவைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் உள்ளே அமர்ந்த தலைவர்கள் வீட்டு உரிமையாளர் எங்கே என்று கேட்ட பிறகு அதன் பிறகு அந்த தம்பதியினரையும் அவரது மகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். அதன்பிறகு தலைவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். வந்த தலைவர்கள் யார் என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு மூர்த்தி- விஜயா தம்பதியினர், தாங்கள் சமைத்த உணவுகளை எடுத்துவந்தனர். ஆனால் அவர்களை பரிமாற விடவில்லை. தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் உணவு வகைகளை பரிமாறினார். அப்போது பாஜக தலைவர் ஜே பி நட்டா இடது கையில் உணவு சாப்பிட்டது முகம் சுளிக்க வைத்தது. மேலும் பருப்பு, வடை, பாசிப்பயிறு, கருப்பு சுண்டல், பஜ்ஜி உள்ளிட்ட ஆறு வகை உணவுகளை வைத்து இருந்த போதும், இரண்டு வகைகளை மட்டுமே நட்டா ருசி பார்த்தார். மீதியை தட்டில் விட்டு வைத்து விட்டனர். ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிட வந்துவிட்டு, பெயருக்கு மட்டும் சுவைத்து விட்டு வைத்தது கிராம மக்களை அதிருப்தி அடைய வைத்தது.