பெரும்பாலான நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மது அருந்துகிறார்கள்.. பப்பு யாதவ் பேச்சால் பரபரப்பு
பெரும்பாலான நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மது அருந்துகிறார்கள் என்று ஜே.ஏ.பி. தலைவர் பப்பு யாதவ் தெரிவித்தார்.
பீகாரில் ஜன் அதிகார் கட்சியின் (ஜே.ஏ.பி.) தலைவர் பப்பு யாதவ் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பப்பு யாதவ் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பப்பு யாதவ் கூறியிருப்பதாவது: மது இல்லாத மாநிலமான குஜராத்தில் கள்ள சாராய இறப்புகள் பதிவாகியுள்ளன.
அதேநேரத்தில், மதுபான விற்பனை வாயிலாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக டெல்லி அறிக்கை அளித்துள்ளது. 80 சதவீத நீதிபதிகள், 90 சதவீத அதிகாரிகள் மற்றும் 95 சதவீத பத்திரிகையாளர்கள் மது அருந்துகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அண்மையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்கும் (லாலன் சிங்) இதே போன்ற கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார்.
அண்மையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், மதுவிலக்கு காரணமாக பல ஊடகவியலாளர்கள் முதல்வர் நிதிஷ் குமார் மீது கோபத்தில் உள்ளனர். மாநில பெண்களின் கோரிக்கையை தொடர்ந்து மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. முதல்வர் தனது மக்களை பற்றி நினைப்பாரா அல்லது பத்திரியாளர்கள் மது குடிக்க முடியாமல் தவிப்பதை பற்றி கவலைப்படுவாரா? என்று தெரிவித்து இருந்தார்.