மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத, மக்கள் விரோத அரசு ஆட்சியில் உள்ளது.. கெலாட் அரசாங்கத்தை தாக்கிய நட்டா

 
ஜே.பி. நட்டா

ராஜஸ்தானில் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத, மக்கள் விரோத அரசு ஆட்சியில் உள்ளது என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ்  அரசாங்கத்தை பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தாக்கினார்.
 
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரில் பா.ஜ.க. மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அந்த விழாவில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: மக்களுக்கு சம்பந்தமே இல்லாத, மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத, மக்கள் விரோத அரசு மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் அமைதிக்கு பெயர் பெற்றது. 

அசோக் கெலாட்

ஆனால் தற்போதைய அசோக் கெலாட் அரசாங்கம் மாநிலத்தின் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தானில் உள்ளது. ஆனால் முதல்வர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ராஜஸ்தானில் உள்ள தற்போதைய காங்கிரஸ் அரசு மக்கள் விரோத அரசு. அது ஆட்சியில் தொடர உரிமை இல்லை. 

காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்துக்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வர தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இப்போதே அங்கு பா.ஜ.க. தனது  தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி விட்டது.