அது தமிழ்நாட்டில் நடக்கும் - பாஜக பதிலடி
அது தமிழ்நாட்டில் நடக்காது என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கு, ‘அது தமிழ்நாட்டில் நடக்கும்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் குறித்தும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்தும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகின்ற வகையில் பேசி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரின் பதவிக்கு இது ஒவ்வாத செயல் என்றார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசிய பீட்டர் அல்போன்ஸ், தமிழக அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் பொருளாதார சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் என்றார். அண்ணாமலை, ஆளுநர் இருவரும் தமிழ்நாட்டை வன்முறைக் களமாக மாற்றவும் , வெறுப்பு அரசியலை செய்யவும் முயற்சிக்கின்றார்கள். மத்திய அரசு பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது என்றார்.
கேரளா, தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் தங்களின் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பீட்டர் அல்போன்ச், எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது தமிழ்நாட்டில் நடக்காது என்று அழுத்தமாக தெரிவித்தார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர், ‘’உண்மை! மதக்கலவரங்ளை ஒடுக்க தவறிய அரசுகளை மக்கள் விரும்பவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரம் நடக்காது என்று மக்கள் நம்புகின்றனர். தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியமைக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.