மண்டியிட்டு மன்னிப்பு கேட்டவர் காலரை தூக்குவதாக சொல்வது கேலிக்கூத்து - பாஜக கடும் தாக்கு

 
sa

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கெத்து காட்டியிருந்தார்.  இதற்கு நடிகர் சத்யராஜ்  ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.  அதில்,   ’’மனிதனுக்கு அழகு சிரிப்பு.  சிரிப்பை விட அழகானது புன்னகை .  சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்ப கவர்ந்தது.  அது சட்டசபையில் நமது தமிழக முதல்வர் மானமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுடைய புன்னகை.   அந்த புன்னகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை சுடர் விட்டது.  பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது.   முத்தமிழறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கலந்திருந்தது .  தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.  காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன்.  ’’என்று தெரிவித்துள்ளார்.

sa

உடனே, தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்காக, காசுக்காக  சுயமரியாதையை இழந்து, கர்நாடக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஒரு நபர் இன்று காலரை தூக்கி விட்டு கொள்வதாக சொல்வது கேலிக்கூத்து’’என்று விமர்சித்துள்ளார்.

 பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் சத்யராஜ்.  இப்படம் கர்நாடகாவில் திரையிட எதிர்ப்புகள் எழுந்தது.   காவிரி விவகாரம் தொடர்பாக  நடந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னட மக்களுக்கு எதிராக ஆவேச குரல் கொடுத்ததால் சத்யராஜ் நடித்துள்ள அந்த படத்திற்கு எதிர்ப்பு இருந்தது.  இதனால் சத்யராஜ் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.  

sat

 அந்த கடிதத்தில்,    ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.  இது  தொடர்பாக தமிழக திரை உலகம் சார்பில் நடந்த கண்டன போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள் .  அதற்காக எனது உருவ பொம்மை எரிக்கப்பட்டது என்று  ஆவேசமாக பேசியிருந்தேன்.   நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக நான் அறிகிறேன்.   அதற்காக 9  வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.   இதற்காக என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மக்களும் நலம் விரும்புகிகளும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் .

 பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான்.   என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரையமாக விரும்பவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.  அந்த கடிதத்தை அப்படியே வாசித்து வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார் சத்யராஜ். இதனால்தான் பாஜக இந்த பதிலடியை தந்திருக்கிறது.