இது கீழ்த்தரமான செயல் - ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கண்டனம்

 
oo

இது கீழ்த்தரமான செயல்; நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்.   திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் , அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது.  சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

oo

 இதன்படி அதிமுகவின் பொதுக்குழு நடந்தது.  பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டதாகவும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.  இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வமும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 கடந்த 29ஆம் தேதி அன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  அப்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதுவும் இரண்டு வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  இதை அடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை விசாரிக்க இருந்தது.

r

 கடந்த முறை தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வராததால் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீது அதிருப்தி கொண்ட ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு  விசாரணையை மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருந்தனர்.   ஆனால் தலைமை நீதிபதியோ இதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் தனி நீதிபதியின் கருத்தை கேட்டு விளக்கம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது தனக்கு எதிராக தலைமை நீதிபதியிடம் புகார் அளித்ததால் இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல். இது கீழ்த்தரமான செயல் என்று ஓபிஎஸ் , வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும்,   தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் . திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்து இருக்கலாம் என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.