#ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு -டுவிட்டரில் டிரெண்டாகுது

 
d

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.  இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.  ஆனால், எதிர்கட்சியினரோ திமுகவின் ஓராண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  #ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரிலும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  கடந்த ஆண்டு மே7ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  ஸ்டாலின் தலைமையில் அவரது அமைச்சரவையும்  பதவி ஏற்றது. 


 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்டாலின்.  இதையே தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு க ஸ்டாலின்  பேசிய போதும் குறிப்பிட்டார்.   ‘’ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக நான் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.   இந்த ஒரு வருட காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடனும் உளப்பாங்குடனும் உழைத்திருக்கின்றேன் என்கிற மனநிறைவோடு தான் இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.


 அவர் மேலும்,  ‘’ ஒரு தனி மனிதனின் வரலாற்றில் வேண்டுமானால் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம் .  ஆனால் ஒரு நாட்டின் ஒரு மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளி தான்.   துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம் என்கிற பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.


 திமுகவினரும் திமுகவின் ஓராண்டு கால சாதனைகளை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.   ஆனால் எதிர்தரப்பினரோ திமுக எந்த சாதனையும் ஓராண்டு காலத்தில் செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  #ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரிலும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.