அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்படுகிறதா?
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி அன்று ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே கலவரம் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தின் கதவை எடப்பாடி தரப்பினர் பூட்டு போட்டு வைத்திருந்ததால் உள்ளே போக முடியாத ஆத்திரத்தில் ஓ . பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் . அதன் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே சென்று ஆலோசனை நடத்தினார்.
இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மேலும் அங்கு வர இருந்தனர். இதனால் மேலும் கலவரம் அதிகமானால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்ந்து அரசு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது வருவாய்த்துறை.
இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்து இருக்கிறார்கள். 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நாளை மதியம் 2. 15 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2. 15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் இந்த உத்தரவை பிறப்பிக்க இருக்கிறார்.