மௌனம் சம்மதமா? தர்மயுத்தம் - 2வா?

 
த்

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்றே பேசத்தொடங்கிவிட்டார்கள் அதிமுகவினர்.  அந்த அளவிற்கு அதற்கான முன்னேற்பாடுகளோடு காய் நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி.  அப்படி என்றால் பன்னீர்செல்வத்தின் முடிவு  என்னவாக இருக்கும் என்பதுதான் அதிமுகவினரின் கேள்வி.   இது அவரின் ஆதரவாளர்களுக்கே தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எந்த முடிவெடுப்பார் ஓபிஎஸ் என்று அவரது ஆதரவாளர்களே யூகிக்க முடியாத அளவுக்கு மவுனத்தில் இருக்கிறாராம்.   முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இப்படித்தான் கடைசி வரைக்கும் மவுனமாக  இருந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் ஓபிஎஸ்.  கடைசி நேரத்தில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார்.  அதுமாதிரியான மவுனமாக இருக்குமா இதுவும் என்று ஓபிஎஸ்சின் தற்போதைய மவுனத்தையும் கணக்கு போட்டு கொண்டிருக்கிறது அவரது ஆதரவு கூட்டம். 

த

இல்லை, மவுனமாக இருந்து மீண்டும் தர்மயுத்தமாக வெடிக்கப்போகிறாரா அண்ணன் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.  அன்றைக்கு தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ் பின்னால் நின்றவர்கள் எல்லாம் எடப்பாடி பக்கம் போய்விட்டார்கள்.   இன்றைக்கு மீண்டும் தர்மயுத்தம் தொடங்கினால் முன்னாள் அமைச்சர்கள்  உதயகுமார், காமராஜ் மற்றும் ஜேசிடி பிரபாகர் , அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் என்று சிலர் மட்டுமே தெரிந்த முகங்களாக இருப்பார்கள்.  அன்றைக்கு இருந்த பெருங்கூட்டம் இன்றைக்கு இல்லாததால் தர்மயுத்தம் என்பதும் சாத்தியப்படுமா?

ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் எப்படியும் சாதித்துவிடுகிறார் எடப்பாடி. ஆனால், கடைசிவரைக்கும் பிடிவாதமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் விட்டுக்கொடுத்து விடுகிறாரே அண்ணன்.  அப்படி ஒரு நிலைமைதான் இந்த ஒற்றைத்தலைமையின் விவகாரத்திலும் வருமா? என்று கவலையுடன் புலம்பி வருகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.