அப்படீன்னா அதிமுகவுக்கு 3வது இடமா? மீண்டும் பொங்கிய பொன்னையன்

 
po

பாஜகவுக்கு எதிராக மீண்டும் பொங்கி இருக்கிறார் பொன்னையன்.  இப்போது என்ன சொல்லி சமாளிக்கப்போகிறார் அண்ணாமலை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது.  அதிமுக எதிர்க்கட்சி வேலையை செய்யவே இல்லை என்று  பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகவே கிண்டல் செய்தபோது அதிமுக சீனியர்கள்  கொஞ்சம் வெடித்தார்கள்.   அதன்பின்னரும் பாஜகவினர் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பது போலவே செயல்பட்டு வருகிறார்கள்.  கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே அப்படி சொல்லியும் வருகிறார்கள்.

தமிழகத்தில் நெம்பர் ஒன் கட்சியாக பாஜகவை கொண்டு வருவேன்.  அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் ஆட்சிக்கு வரும்.  2024 நாடாளுமன்ற தேர்தலில் 25 எம்பிக்களை தமிழகத்தில் இருந்து பாஜக அனுப்பும் என்று அண்ணாமலை மார்தட்டிக்கொண்டே இருக்கிறார்.  இது அதிமுக தலைமையை சூடாக்கியிருக்கிறது. அதனால்தான் கட்சியின் சீனியர் பொன்னையனை விட்டு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

pm

அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பொன்னையன்,   காவிரி நீர் பங்கீடு தமிழகம்  வருவதற்கு பாஜக போர்க்கொடி பிடித்து இருக்க வேண்டும்.  அதுதான் பாஜகவை வளர்க்கும்.  ஆனால் அதற்கு பதிலாக பாஜகவினர் அதிமுக பின்னுக்குத் தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக செய்து வருகின்றார்கள்.  இதன்மூலம் வளர்ச்சியடைய நினைக்கின்றார்கள்.  இதனால் அதிமுகவினர் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  தமிழ்நாடு பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். 

 பொன்னையன் பேச்சினால் அதிமுக- பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கேட்டபோது,   தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தால் அதிமுகவிற்கு ஆபத்து என்று பொன்னையன் பேச்சு குறித்த கேள்விக்கு,   எந்த கட்சி தலைவரும் அவரவர் விருப்பங்களை சொல்லலாம்.  தன்னுடைய கட்சி நம்பர் ஒன் கட்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.  இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்றார்.

இந்நிலையில் மீண்டும் பொன்னையன்,  தன்னை எதிர்க்கட்சி போல பாஜக தொடர்ந்து  சித்தரித்து வருகிறது.  அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.  அதிமுக ஐடி விங் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.  எதிர்க்கட்சி பாஜகதான் என்று வலைத்தளங்களில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  இது திட்டமிட்டு பரபரப்பப்படுகிறதா? என்று கேட்கிறார். 25 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றுவோம் என்கிறார்கள். அப்படியானால் அதிமுக முன்றாம் இடமா? என்று வெடித்திருக்கிறார்.