இன்ஸ்டன்ட் காபி உதயநிதிக்கு அந்த வாய்ப்பு இல்லை..அண்ணாமலை தான் முதல்வர் ஆவார்! -வி பி துரைசாமி

திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் வி.பி. துரைசாமி . தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமானவர் வி. பி.துரைசாமி. தற்போது தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருக்கிறார். அவர் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் எதிர்காலம் குறித்தும், திமுகவில் உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் எழுந்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இன்ஸ்டன்ட் காபி போல் சில தலைவர்கள் இன்ஸ்டன்ட் ஆக்கப்படலாம் . ஆனால் அது நிலைக்காது . செயல்பாட்டின் மூலம் தான் ஒருவர் மக்களின் கவனத்தை பெற முடியும். அந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு மக்களின் கவனத்தை ஈர்த்தவராக அண்ணாமலை தான் என்கிறார். அவர் மேலும் அது குறித்து, பாஜகவில் சுலபமாக ஒருவர் தலைவராகி விட முடியாது.
இளம் வயதில் காவல்துறையில் ஒரு நேர்மையான அதிகாரியாக பணியாற்றி காவல்துறையில் உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்பு வந்தும், வயது இருந்தும் அதைத் துறந்து விட்டு வந்திருக்கிறார் அண்ணாமலை. அவரின் உழைப்பு, நேர்மை இதையெல்லாம் பார்க்கும் போது அவர் தமிழகத்தின் முதலமைச்சராக நிச்சயம் வருவார். மக்கள் ஆதரவோடு வருவார் என்று சொல்ல முடியும். ஆனால் உதயநிதி திமுகவில் இப்போது திணிக்கப்பட்டாலும் அவரால் மக்களின் ஆதரவை பெற வாய்ப்பு இல்லை என்கிறார்.
துக்ளக் வார இதழ் அளித்த பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தமிழ்நாட்டிலிருந்து 25 எம்பிக்கள் கிடைப்பார்கள் என்று அண்ணாமலை சொல்வது சாத்தியம் தானா? என்ற கேள்விக்கு, மக்கள் மத்தியில் இன்றைக்கு நிலவும் கருத்தை பார்த்தால் 25 என்பது குறைவு தான் . எங்கள் அணிக்கு 35 தொகுதிகள் கிடைக்கும் என்கிறார்.
அத்தனை சீட் பாஜகவுக்கு கிடைக்கும் என்றால், அதிமுக உங்களிடம் ஜூனியர் பார்ட்னராக இருக்குமா? என்ற கேள்விக்கு, சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. அது அப்போது இருந்த நிலை. இப்போது தேசிய அளவில் தேர்தல் என்பதால் தேசிய கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி. அதில் முக்கிய பங்குதாரராக பாஜக இருக்கும் என்கிறார்.