அடுத்தடுத்த இருக்கையில் ஓபிஎஸ் -இபிஎஸ் - சபாநாயகர் அப்பாவு என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த இருக்கையில் ஓபிஎஸ் -இபிஎஸ் அமர்ந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு பதிலாக தான் நியமிக்கப்பட்ட ஆர்.பி. உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்காததால் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் இன்றைய கூட்டத்திற்கு அவர் வருகை தந்துள்ளார் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார். பழனிச்சாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் பன்னீர்- பழனிச்சாமி தரப்பினர் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் பன்னீர் -பழனிச்சாமி இன்றைய சட்டப்பேரவையில் பங்கேற்கின்றனர் . எடப்பாடி பழனிச்சாமி -ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏக்களும் இன்று பங்கேற்றுள்ளனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பல கடிதங்கள் சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி இருக்கும் நிலையில் அது குறித்து பதில் அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு?, எனது அறைக்கு வந்து கேட்டால் பதில் அளிப்பேன். சட்டமன்றத் தொடரில் இது குறித்து கேட்டால் பதில் அளிப்பேன். மற்றபடி வெளியே பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டமன்றத்திற்கு வருவதால் அவர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து கேள்விகளும் எழுப்புவார்கள் என்று தெரிகிறது . அதற்கு சபாநாயகர் அப்பாவு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதுகுறித்து கேள்வி நேரத்தில் எடப்பாடி தரப்பினர் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிகிறது.