நான் ரூ.610 கோடிக்கு வொர்த் இல்ல.. திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள் - அண்ணாமலை..

 
அண்ணாமலை

 நான் ரூ.610 கோடி அளவிற்கு வொர்த்  இல்லை என்றும், ஊரில்  ஆடு, மாடுகள் தான் இருக்கின்றன, அவற்றை வேண்டுமானால்  பிடித்துச் செல்லட்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கிரிமினல் நடவடிக்கை மற்றும் ரூ.100ன் கோடி அபராதம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.  இந்நிலையில் இன்று சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதற்கு பதிலளித்துள்ளார்.

அண்ணாமலை

அவர் கூறியதாவது, “திமுக அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி சந்திப்பேன்  என்றும், நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம்  இருப்பதாகவும் தெரிவித்தார்.  திமுக அவதூறு வழக்கு போடும் அளவிற்கு நான் தகுதி இல்லாத சாதாரண விவசாயி தான் என்று கூறிய அவர்,  610 கோடி ரூபாய்க்கு நான் வொர்த் இல்லை என்றும் என்கிட்ட 2 டப்பா, ஊரில் 2 ஆடு, மாடுகள் தான் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலை

சாதாரண மனிதனான என்னிடம் முதலில் 500 கோடி , இரண்டாவதாக  ரூ.100 கோடி மேலும்  தற்போது 10 கோடி ரூபாய்  நஷ்ட ஈடு கேட்டு திமுக எம்.பி.,  வில்சன் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.  மேலும்  எல்லாத்தையும் அனுப்புங்கள்,  ஒருவாரம் டைம் எடுத்து மொத்தமாக அனுப்பி வையுங்கள் என்று  விளையாட்டாக தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தான் மிரட்டி  பணம் வாங்கியதாக திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அண்ணாமலை

தான் பாஜக தலைமை அலுவலகத்தில்  இருப்பதாகவும்,  தெம்பு, திராணி இருந்தால், உண்மையான ஆதாரம் இருக்கிறது  என்றால் முழு போலீஸ் படையை பயன்படுத்தி தன்னை கைது செய்து உள்ளே அனுப்புங்கள் என்றும் சவால் விடுத்தார். மேலும் அவ்வாறு செய்யாவிட்டால்,  திமுக சொல்வதை இனி மக்கள் கேட்க மாட்டார்கள் என்றும், என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாகும் என்றும்  அண்ணாமலை தெரிவித்தார்.  பின்னர் முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து பல கேள்விகள் இருப்பதாகவும்,  அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.