என் மீது வழக்கு போட்டால் அடுத்த பட்டியல் வெளியிடுவேன் - எச்சரிக்கும் அண்ணாமலை
அண்மையில் திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலைக்கு எதிராக வழக்கு பாய இருக்கிறது என்ற பேச்சு இருந்து வரும் நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசனும் அண்ணாமலையை ஒருமையில் பேசி, ஒருமுறை கைது செய்து உள்ளே போட்டால் அடங்கி விடுவார் என்று எச்சரித்திருந்தார். ஆனால் அண்ணாமலை தன்னை கைது செய்தால் அடுத்த பட்டியல் வெளியாகும் என்று சொல்லி திமுகவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை ஊர்ஜிதம் செய்த பின்னர் தான் நாங்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறோம். திமுகவின் ஊழல் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு கொண்டேதான் இருப்போம். முதல் பட்டியலை வெளியிட்ட உடனேயே என் மீது வழக்குப் போடுவேன் என்கிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என்று திமுக தப்பு கணக்கு போடுகிறது. ஆனால், வழக்கு போட்டால் அடுத்த பட்டியல் இதை விட பத்து மடங்கு அதிகமாக வெளியிடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு அடுத்த நாவலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார்.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் எதிர்க்கட்சியாக வருவதற்கு முயன்று வருகிறது பாஜக என்ற திமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சி என்பது முக்கியம் கிடையாது. இதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். பாஜக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திமுகதான் உருவாக்கி கொண்டிருக்கிறது என்று சொன்னவர், மக்கள் மத்தியில் உண்மைகளை கொண்டு செல்வதால் பாஜக கட்சியை வளர்த்து வருகிறார்கள். அதேநேரம் பாஜகவின் நோக்கம் ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்பது தான். மூன்றாவது கட்சியாக வருவதற்கு யார் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்ளலாம் . ஆனால் நாங்கள் முதல் கட்சியாக வருவதற்குத்தான் உழைத்துக் கொண்டிருக்கிரோம் என்றார் அழுத்தமாக.