ரா.பா. கலந்து கொள்ளவில்லை என்றால் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாதா?

 
raa

அதிமுக பொதுக்குழு வரும் 23 ஆம் தேதியன்று சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கிறது.  இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரியிருந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி .  அவரின் இந்த கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

 அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.  வேலை வாங்கித் தருவதாக இவர் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.   இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.   உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் தமிழக போலீசார் ராஜேந்திரபாலாஜியை கைது செய்துவிட்டனர்.

raaaa

 இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது .  அதேநேரம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய விருதுநகர் மாவட்ட எல்லையை விட்டு அவர் வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.   காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை  ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது.

 இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடக்கிறது.   விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் என்ற முறையில் இந்த பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டியது இருக்கிறது.   ஆகவே எனக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,   அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதால் வருகிற 23-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னைக்கு  பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று வாதிட்டனர்.

 இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.   மனுதாரர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொள்ளவில்லை என்றால் கூட்டம் நடைபெறாதா? என்று கேட்டு ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.