குஷ்புவை பேசும்போது நான் கைதட்டி சிரிக்கல -அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mt

குஷ்புவைப் பற்றி திமுக பேச்சாளர் பேசும் போது அந்த மேடையில் நான் அதை கைதட்டி ரசித்து சிரித்ததாக சொல்வது அப்பட்டமான பொய் என்று குஷ்புவின்  குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.  வருந்ததக்க வகையில் ஒருவர் மேடையில் பேசிய போது நான் சிரித்து கொண்டு இருந்ததாக வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பரப்புகின்றனர் பாஜகவினர். இதில் வியப்பு ஏதும் இல்லை! இந்த விஷயத்தில் கூட வெட்டி ஒட்டி பேசும் பாஜகவினர் உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

m

 சென்னை ஆர். கே. நகரில் அண்மையில் அமைச்சர் மனோ தங்கராஜ்  முன்னிலையில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்,  பாஜக மகளிர் பிரிவில் இருக்கும் நடிகைகள் குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஒருமையில் அழைத்து, ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசினார்.  இது பெரும் சர்ச்சையாக வெடித்தது . 

அமைச்சர் முன்னிலையில்  திமுக நிர்வாகி இப்படி பேசுகிறார் அதையும் அமைச்சர் கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் என்று இந்த விவகாரம் பெரிதானது . இதை அடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி இதற்கு மன்னிப்பு கேட்டார்.  ஆனால் முதல்வரோ அன்று மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மனோ தங்கராஜோ நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.   சைதை சாதிக் மேல்நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்த்தது பாஜக.   இது எதுவுமே நடக்காததால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.   இதன் பின்னர் சைதை சாதிக் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .  

k

ஆனாலும்,  நடிகை குஷ்பு,  அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் விடமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.  திமுக தலைமை இந்த விவகாரத்தில் எடுக்க முடிவுக்கு காத்திருந்தேன்.   முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்சி தலைவராக சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருந்தேன்.  அதை வெளிப்படையாகவும் சொல்லியிருந்தேன்.  ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   சாதிக் தரம் அவ்வளவுதான்.  ஆனாலும் அவரது பேச்சை மேடையில் இருந்து ரசித்து கைதட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ் இதுவரைக்கும் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.   தனது தரக் குறைவான பேச்சுக்காக சாதிக்  என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூட நான் எதிர்பார்க்கவில்லை.   அவரை விட அதிகம் குற்றம் இழைத்தவர் அமைச்சர் மனோ தங்கராஜ் தான்.  அவர் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் நானும் பாஜகவோ இந்த பிரச்சினையை  விடப் போவதில்லை.   டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரும் 4ஆம் தேதி நேரில் புகார் கொடுக்க இருக்கிறேன்.   எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று ஆவேசப்பட்டிருக்கிறார் .

sai

 இந்நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்த வெட்டுவந்தியில் மக்கள் தீர்வு தளம் நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு,  குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். 

 அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.  அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்கும் வரை விட மாட்டேன்; ஓயமாட்டேன் என்று குஷ்பு சொன்னது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   ''திமுக பேச்சாளர் பேசிய அந்த விவகாரத்தில் திமுகவின் கட்சி சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுவிட்டது.  பெண்ணியத்தை ஒருபோதும் திமுக  அவதூறாக பேசாது.  அப்படி பேசிய பேச்சாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

 அவர் மேலும்,  அ''ந்த மேடையில் குஷ்புவை பற்றி பேசியபோது நான் கைதட்டி ரசித்து சிரித்ததாக சொல்வது அப்பட்டமான பொய் . பாஜகவிற்கு வேறு விவகாரங்கள் கிடைக்காததால் இதை பெரிதாக்க நினைக்கிறார்கள்'' என்றார்.

ku

அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும்,  ‘’சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ கழகத்திற்கோ உடன்பாடு இல்லை, ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.  திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும், தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு சுந்தர்  ஏதேதோ பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை முடிவதற்குள் பாஜக அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பாஜக கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை.

tw

வருந்ததக்க வகையில் ஒருவர் மேடையில் பேசிய போது நான் சிரித்து கொண்டு இருந்ததாக வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பரப்புகின்றனர் பாஜகவினர். இதில் வியப்பு ஏதும் இல்லை! இந்த விஷயத்தில் கூட வெட்டி ஒட்டி பேசும் பாஜகவினர் உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான்.’’என்று தெரிவித்திருக்கிறார்.