’’நான் ஜெயலலிதாவின் அண்ணன்; முதல் மனைவிக்கு பிறந்தவன்.. சொத்துல பங்கு வேண்டும்’’
நான் ஜெயலலிதாவின் அண்ணன். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு பிறந்தவன். என் தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வேதவள்ளி மூலம் பிறந்த ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் எனது சகோதரர், சகோதரிகள் என்று சொல்லும் வாசுதேவன், ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
ஜெயலலிதாவின் மகள் என்றும், சகோதரி என்றும் பலர் பரபரப்பு ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால் இந்த வாசுதேவன் ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டில் டிசம்பர் 5ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இதை அடுத்து அவரின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா , தீபக் ஆகியோர் மட்டுமே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவை தனது சகோதரி என்றும் அவர்களின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்றும் கேட்டு கர்நாடகா மாநிலம் வியாசரா புரத்தைச் சேர்ந்த எண்பத்தி மூணு வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன் முதல் மனைவிக்கு தான் பிறந்ததாகவும் தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வேதவள்ளிக்கு பிறந்த ஜெயக்குமாரும் ஜெயலலிதாவும் தனது சகோதரர் சகோதரி என்று கூறி இருக்கிறார். ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் ஜெயமா தொடர்ந்த வழக்கில் வேதவள்ளி, ஜெயக்குமார் ,ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக இருந்ததையும் குறிப்பிட்டு இருக்கிறார் .
ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கு 50% தந்து விட வேண்டும் என்றும் தீபா, தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வாசுதேவன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.