சாவர்க்கர் விவகாரம்.. ராகுல் காந்திக்கு வரலாற்று அறிவு மிகக் குறைவு.. அசாம் முதல்வர் தாக்கு

 
ராகுல் காந்தி

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, அவருக்கு வரலாற்று அறிவு மிகக்குறைவு என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

குஜராத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரம் செய்து வருகிறார். அகமதாபாத்தில் தனது பிரச்சாரத்திற்கு நடுவே ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தியை நான் பல நாட்களாக கவனித்து வருகிறேன். கவுகாத்தியில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால், அவர் (ராகுல் காந்தி) குஜராத்தில் இருப்பார். அவர் குஜராத்திலும் பேட் மற்றும் பேடை எடுத்து செல்வார், அவர் தயாராகிக் கொண்டே இருப்பார், ஆனால் களத்திற்கு வரமாட்டார். 

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

தேர்தல் குஜராத்தில் இருக்கிறது, ஆனால் அவர் தெற்கில் இருக்கிறார். இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடந்தபோது, கேரளாவில் இருந்தார். அவர் விளையாட விரும்பாததால் அவர் டிரெசிங் அறையை விட்டு வெளியேற விரும்பவில்லை. வீர் சாவர்க்கரை பற்றிய ராகுல் காந்தியின் கருத்தை பற்றி என்னால் கூற முடியும், அவருக்கு வரலாற்று அறிவு மிகக் குறைவு. ஒருவேளை அவருக்காக யாராவது வரலாற்றைப் படித்திருக்கலாம், அவர் சொந்தமாக படிக்கவில்லை. சாவர்க்கரை அவமதித்தன் மூலம் ராகுல் காந்தி பெரும் பாவம் செய்துள்ளார். அதற்கு அவர் அரசியல் ரீதியாக விலை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பா.ஜ.க. இருக்க வேண்டிய இடத்தில் உள்ளது. எங்களுக்கு போட்டி இல்லை. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸூக்கு இடையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு போட்டி உள்ளது.

காங்கிரஸ்

ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவின் ஹிங்கோலி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மன்னித்து  சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தார். வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிரஸூக்கு எதிராக வேலை செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் படையில் சேர்ந்தார் என்று தெரிவித்து இருந்தார்.