காங்கிரஸ் கட்சியில் மனிதர்களை விட நாய்களுக்கு மதிப்பு அதிகம்... ஹிமாந்தா பிஸ்வா சர்மா

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா


காங்கிரஸ் கட்சியில் மனிதர்களை விட நாய்களுக்கு அதிக மதிப்பு இருப்பதாக உணர்கிறேன். அதனால் என்னுடன் யாரும் தேநீர் அருந்தவில்லை என்ற மல்லிகார்ஜூன் கார்கேவின் கருத்து ஒரளவு சரியாக இருக்கலாம் என்று ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

குஜராத்தில் தேடியாபாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: உங்களை போன்ற ஒருவர் (பிரதமர் மோடி) ஏழை என்று கூறுகிறார். நானும் ஏழை, தீண்டத்தகாதவர்களில் நானும் ஒருவன். மக்கள் உங்கள் தேநீரைக் குடித்தார்கள், யாரும் என் டீயைக் குடித்திருக்க மாட்டார்கள். ஒரிரு முறை பொய் சொன்னால் மக்கள் கேட்பார்கள் ஆனால் எத்தனை முறை பொய் சொல்வீர்கள்? அவர் (மோடி) பொய்களின் தலைவன். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அசாம் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரபல தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மல்லிகார்ஜூன் கார்கேவின் தேநீர் கருத்துக்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்தார். ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னுடன் யாரும் தேநீர் அருந்தவில்லை என்று மல்லிகார்ஜூன் கார்கே கூறினார். எனவே ராகுல் காந்தி, கார்கே ஜியுடன் தேநீர் அருந்தாமல் இருக்கலாம். 

காங்கிரஸ்

காங்கிரஸ் அத்தகைய நடைமுறைகளை பின்பற்றுகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கேவுடன் தேநீர் அருந்துவதைக் காணக்கூடிய பின் தேதியிட்ட படத்தை டிவிட் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மனிதர்களை விட நாய்களுக்கு அதிக மதிப்பு இருப்பதாக உணர்கிறேன். அதனால் என்னுடன் யாரும் தேநீர் அருந்தவில்லை என்ற மல்லிகார்ஜூன் கார்கேவின் கருத்து ஒரளவு சரியாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.