டெல்லி, பஞ்சாப்பை அடுத்து இமாச்சல்? சத்யேந்திர ஜெயின் கைது பின்னணி இதுவா?
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் ஒன்பதாம் தேதி வரைக்கும் அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதே வழக்கில் இதுவரை ஏழு முறை விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார் சத்யேந்திர ஜெயின். அப்போதெல்லாம் கைது செய்யப்படாதவர் இப்போது கைது செய்யப்பட்டு இருப்பதன் நோக்கம் என்ன என்பது தெரியாதா என்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர் .
ஹவாலா பட விவகாரத்தால் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறது அமலாக்கத்துறை. ஆனால் அமைச்சரின் இந்த கைது நடவடிக்கைக்கு முழுக்க அரசியல் பின்னணியே காரணம் என்று குற்றம் சாட்டுகிறது ஆம் ஆத்மி.
இமாச்சலப் பிரதேச பொறுப்பாளராகவும் உள்ளார் சத்யேந்திர ஜெயின். அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் இமாசலப்பிரதேசமும் ஒன்று. அங்கு பாஜக ,காங்கிரஸ் கட்சிகள் பரபரப்பாக இதற்காக தேர்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் தேர்தலை போல் இமாச்சல பிரதேச தேர்தலிலும் வென்று விடலாம் என்று ஆம் ஆத்மி கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது.
இது பாஜகவுக்கு சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் தான் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இமாச்சல பிரதேசத்தின் தேர்தலை முன்வைத்துதான் சக்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்.
சத்யேந்திர ஜெயினை இமாச்சல் போகாமல் தடுப்பதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார் ஆம் ஆத்மி தலைவர் மனிஷ் சிசோடியா.
8 ஆண்டுகளுக்கு முன்னதாக சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவர் மீது குற்றம் ஏதும் இல்லை என்றும் கூறிவிட்டனர். மேலும் இதே வழக்கில் இதுவரைக்கும் ஏழு முறை விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். அப்போதெல்லாம் கைது செய்யப்படாத அவர் இப்போது மட்டும் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியாதா என்று கேட்கிறார்கள் ஆம் ஆத்மியினர்.