இமாச்சல பிரதேசத்தில் கை மீண்டும் ஆட்சிக்கு வரும்.. காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2017 சட்டப்பேரவை தேர்தலில் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் கூறுகையில், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் உள்ளோம். கட்சி தலைமை முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் என தெரிவித்தார். இமாச்சல பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான விக்ரமாதித்யா கூறுகையில், நாங்கள் மீண்டும் (ஆட்சிக்கு ) வருவோம் என்பதில் நாங்கள் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம்.
இது பிரச்சினைகளை பற்றியது. 2017 இமாச்சல சட்டப்பேரவை தேர்தலின் போது முந்தைய (பா.ஜ.க.) அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.