காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு தாவ மாட்டார்கள்... இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நம்பிக்கை

 
சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு தாவ மாட்டார்கள் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நம்பிக்கை தெரிவித்தார்.

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நிதிச் செயலாளரிடம்  பேசினோம். ஒரு உத்தியின் கீழ், எங்கிருந்து பணம் உருவாக்க வேண்டும், எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை செய்துவிட்டோம். முதல் அமைச்சரவை கூட்டத்தில் அதை அறிமுகப்படுத்துவோம். அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடக்கும். அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் யாரும் வற்புறுத்தவில்லை. 

பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் கிடையாது, ஆனால் பதவிக்காகத்தான் மோதல் இருந்தது. 3 முதல் 4 பேர் முதல்வர் பதவியை வகிக்கத் தயாராக இருந்தனர். இப்போது வரை அமைச்சரவை விரிவாக்கத்தை செய்யவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். ஏதாவது தவறு நடந்திருந்தால் ராஜஸ்தான் போன்ற சூழல் ஏற்பட்டிருக்கும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு தாவ மாட்டார்கள். பா.ஜ.க.வின் தவறான ஆட்சிக்கு எதிராக மாநில மக்கள் வாக்களித்துள்ளனர். 

ராகுல் காந்தி

நாடு வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தியின் பேச்சை கேலி செய்வது உள்ளிட்ட பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி மக்களின் கவனத்தை மையப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப பா.ஜ.க. முயற்சிக்கிறது. மக்கள் நலனுக்காக பாடுபடுவதில் எனது அரசு உறுதிபூண்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்களுக்கு அளித்த 10 வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.