இளம் தலைவர்களை புறக்கணித்தால், காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது, கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியாது.. ராஜஸ்தான் அமைச்சர்

 
ஹேமராம் சவுத்ரி

கட்சியின் இளம் தலைவர்களை புறக்கணித்தால், காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது மற்றும் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியாது என்று ராஜஸ்தான் அமைச்சர் ஹேமராம் சவுத்ரி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது.  முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. அம்மாநில காங்கிரஸில் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அணி,  இளம் தலைவரான சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அணி என 2 கோஷ்டிகள் காணப்படுகிறது. இந்நிலையில் சச்சின் பைலட் ஆதரவாளரும், ராஜஸ்தான் அமைச்சருமான ஹேமராம் சவுத்ரி, சச்சின் பைலட்டுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நேற்று ஹேமராம் சவுத்ரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

கட்சியின் இளம் தலைவர்களை புறக்கணித்தால், காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது மற்றும் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியாது. காங்கிரஸின் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது கட்சியை பலப்படுத்தும். கடந்த செப்டம்பர் 25ம் தேதி பிரச்சினைக்கு (அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80க்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம் கொடுத்த விவகாரம்) இரண்டு நாட்களில் தீர்வு காண்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் வேணு கோபால் உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தவறான செய்தியை அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ்

சச்சின் பைலட் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பதவியிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சிக்காக அவர் செய்த பணிகள் யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை. சச்சின் பைலட் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மற்றும் அவரது நிகழ்ச்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவர் எந்த பதவியிலும் இல்லை, அத்தகைய பிரபலமான மற்றும் புகழ் வாய்ந்த தலைவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாவிட்டால் கட்சி எப்படி வலுவடையும்? இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹேமராம் சவுத்ரியின் கருத்து ராஜஸ்தான் காங்கிரஸூக்குள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.