எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா.. பா.ஜ.க.வில் இணையும் குல்தீப் பிஷ்னோய்.. ஹரியானா காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவு..
காங்கிரஸ் கட்சியின் பிரலமான மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான குல்தீப் பிஷ்னோய் இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஹரியானா மாநிலம் அடம்பூர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய். இவர் அண்மையில் நடைபெற்ற ஹரியானா மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகளின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைமை குல்தீப் பிஷ்னோய் மீது கோபம் அடைந்தது. இதனையடுத்து குல்தீப் பிஷ்னோயை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் அண்மையில் குல்தீப் பிஷ்னோய் டெல்லி சென்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். இதனால் அவர் பா.ஜ.க.வில் விரைவில் இணைவார் என கூறப்பட்டது. இந்நிலையில் குல்தீப் பிஷ்னோய் இன்று பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று குல்தீப் பிஷ்னோய் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக குல்தீப் பிஷ்னோய் கூறுகையில், பி.எஸ்.ஹூடா என்னை ராஜினாமா செய்யுமாறு சவால் விடுத்தார், நான் அவருடைய சவாலை நான் ஏற்றுக்கொண்டேன், இப்போது ஆதம்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற சொல்லி நான் சவால் விடுகிறேன் என தெரிவித்தார்.
குல்தீப் பிஷ்னோய் நேற்று முன்தினம், காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து விட்டு புதிய இன்னிங்ஸ் தொடங்க போவதாக அறிவித்தார். அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே வளர்ச்சிக்கான பணிகளை விரைவான பணிகளை செய்ய முடியும். முதல்வர் (மனோகர் லால் கட்டார்) ஆற்றிய பணியை வலுப்படுத்த வேண்டும். நான் எனது ராஜினாமாவை (காங்கிரஸிலிருந்து) வழங்குவேன். ஒரு பிரபலமான தலைவர் கட்சியில் இணைகிறார் என்ற நல்ல செய்தியை பா.ஜ.க.வுக்கும கொடுக்க வேண்டும் என்று குல்தீப் பிஷ்னோய் தெரிவித்தார்.