நாடு, சமூகத்தின் நலனுக்கு எதிராக கட்சி செயல்பட்டு வருகிறது.. காங்கிரஸிலிருந்து விலகிய ஹர்திக் படேல்

 
ஹர்திக் படேல்

நாடு, சமூகத்தின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என சோனியா காந்திக்கு எழுதிய தனது  ராஜினாமா கடிதத்தில் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு பல போராட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்தார். குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக உயர்ந்தார். ஆனால் சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியை ஹர்திக் படேல் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவர் காங்கிரஸிலிருந்து விலகுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் படேல் விலகினார். 

காங்கிரஸ்

ஹர்திக் படேல் தனது ராஜினாமா தொடர்பாக கூறியதாவது: இன்று (நேற்று) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த முடிவுக்கு எனது நண்பர்கள் ஆதரவாளர்கள், நான் அங்கம் வகிக்கும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த கூட்டாளிகள் மற்றும் ஒட்டு மொத்த குஜராத் மக்களிடமிருந்தும் நான் பெரும் ஆதரவை பெறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நடவடிக்கைக்கு பிறகு, நம் மாநில மக்களுக்காக நான் உண்மையிலேயே சாதகமாக பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன். 

சோனியா காந்தி

குஜராத் மக்களின் அன்பு மற்றும் பாசத்திற்காக நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். மேலும் நமது நாட்டின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹர்திக் படேல், சோனியா காந்திக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், காங்கிரஸை சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்சி தொடர்ந்து நாடு மற்றும் மற்றும் சமூகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.