முக்கிய முடிவுகளை எடுக்கும்போது என்னை கருத்தில் கொள்ளவில்லை.. காங்கிரஸ் தலைமையை குற்றம் சாட்டிய ஹர்திக் படேல்

 
காங்கிரஸ்

குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக நான் இருந்தபோதிலும், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது என்னை கருத்தில் கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைமை மீது ஹர்திக் படேல் குற்றம் சாட்டினார்.

குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு பல போராட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக உள்ளார். ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது கட்சியை (காங்கிரஸ்) கடுமையாக விமர்சனம் செய்தார். இது குஜராத் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் படேல் பேட்டியில் கூறியதாவது:  2017  குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸூக்கு நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற படிதார் உதவினர். இப்போது அதே படிதார்களையும், கோடல்தாம் அறக்கட்டளையின் தலைவர் நரேஷ் படேலையும் காங்கிரஸ் அவமதிக்கிறது. 

ஹர்திக் படேல்

கடந்த இரண்டு ஆண்டுகளில், நரேஷ் படேல் அரசியலுக்கு வருவதை பற்றி நாங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏன் கட்சி முடிவெடுக்க (கட்சியில் சேர்ப்பது) இவ்வளவு நேரம் எடுக்கிறது? காங்கிரஸ் ஏன் நரேஷ் படேலையும், படிதார்களையம் அவமதிக்கிறது. குஜராத்தில் காங்கிரஸின் நான் செயல் தலைவராக இருந்தாலும், முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கட்சி தலைமை என்னை கருத்தில் கொள்ளவோ அல்லது கேட்கவோ இல்லை. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெகதீஷ் தாக்கூர்

இது தொடர்பாக குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் கூறுகையில், பாடிதாரையோ, நரேஷ் பட்டேலையோ காங்கிரஸ் ஒரு போதும் அவமதித்ததில்லை. நரேஷ் படேல் கட்சியில் இணைந்தால் காங்கிரஸ் மிகுந்த மகிழ்ச்சி அடையும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளோம். தாமதம் காங்கிரஸ் தரப்பில் இல்லை. எந்த கட்சியில் சேருவது என்று நரேஷ் படேல் பரிசீலித்து வருகிறார்.  அது அவருடைய  தனிப்பட்ட முடிவு. படிதாரை நாங்கள் அவமதிக்கவில்லை. ஒவ்வொருவரையும் மதிக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.