குஜராத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது... ஹர்திக் படேல்

 
காங்கிரஸ்

குஜராத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என ஹர்திக் படேல் தெரிவித்தார்.

குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு பல போராட்டங்களை நடத்தி மிகவும் பிரபலமானவர் ஹர்திக் படேல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக ஹர்திக் படேலுக்கும்,  கட்சிக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதனால் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் படேல் விலகினார். இதனையடுத்து ஹர்திக் படேல் பா.ஜ.க. அல்லது ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என பேசப்பட்டது.

ஹர்திக் படேல்
ஆனால் அந்த தகவல்களை ஹர்திக் படேல் மறுத்துள்ளார். ஹர்திக் படேல் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எந்த கட்சியில் சேருவது என்று நான் முடிவு செய்யவில்லை. எப்போது முடிவு செய்வேனோ அப்போது நான் வெளிப்படையாக அறிவிப்பேன். கட்சிக்கு நெருக்கடி இருக்கும் போது, காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்கள் விருந்தில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். 

ராகுல் காந்தி

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஏசி அறைகளில் சிக்கன் சாண்ட்விச்களை சாப்பிடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். பல கோரிக்கைகள் இருந்தும், ராகுல் காந்தி என்னை நம்பி கட்சி கடமைகளை என்னிடம் ஒப்படைக்கவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஜாதி அடிப்படையிலான அரசியல் விளையாடுகிறது. குஜராத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே  செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.