சர்வாதிகாரி ஸ்டாலின்...மருத்துவமனையில் இருந்தவரை துன்புறுத்தி கைது செய்வதா? அண்ணாமலை ஆவேசம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கேபி ராமலிங்கத்தை போலீசார் கைது செய்து உள்ளதால் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சர்வாதிகாரி ஸ்டாலினை சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த 11ஆம் தேதி அன்று பாஜக சார்பில் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா பாதயாத்திரை நடந்தது. அப்போது பாஜக மாவட்ட தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர், முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணைத்தலைவருமான கே. பி. ராமலிங்கம் ஆகியோர் இந்த பாதயாத்திரையை தொடங்கி வைத்தனர். அந்தப் பாதயாத்திரை தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.
அதன் பின்னர் அங்கிருக்கும் பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முயன்றனர் பாஜகவினர். கதவு பூட்டப்பட்டிருந்ததால் அங்கிருந்த காப்பாளரிடம் கதவை திறக்க வலியுறுத்தினார்கள். ஆனால் அலுவலரின் அனுமதியின்றி கதவை திறக்க முடியாது என்று காப்பாளர் சொல்லிவிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பாஜகவினர் பாரத மாதாவுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.
பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதால் அது குறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து கேபி இராமலிங்கம், பாஸ்கர் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் வீட்டிலிருந்த கேபி ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். அவரை பெண்ணாகரம் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர். அப்போது கே பி ராமலிங்கத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதால் அண்ணாமலை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ’’மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் எம்பியை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா?பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்ச மாட்டோம்’’என்கிறார்.
அவர் மேலும், ‘’குடும்ப ஆட்சியின் அடுத்த பரிமாணமே சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், எங்களைத் துன்புறுத்தலாம். உங்கள் அடக்கு முறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சர்வாதிகாரி ஸ்டாலின். உங்களை சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்’’என்கிறார்.