5 மாதத்துக்குள் முடிவை மாற்றிய தேவகவுடா குடும்பம்.. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மகனை களமிறக்கும் எச்.டி. குமாரசாமி

 
க்ளார்க் போல் என்னை நடத்தியது காங்கிரஸ் – குமாரசாமி

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ராமநகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இவ்வளவுக்கும் அந்த மாண்டியா தொகுதி மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. அந்த தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரா சுமலதா அம்பரீஷிடம் நிகில் தோல்வி கண்டார்.

நிகில்

இந்நிலையில் கடந்த ஜூலையில் எச்.டி.குமாரசாமி தனது மகன் நிகில் எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவையில் போட்டியிட மாட்டார் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ராமநகர் தொகுதியில் நிகில் போட்டியிடுவார் என்று குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி தெரிவித்தார். தற்போது ராமநகர் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனிதா குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதா குமாரசாமி

எச்.டி. குமாரசாமி எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சன்னப்பட்டனா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவின் நெருங்கிய குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் அரசியல் உள்ளனர். இதனை குறிப்பிட்டு மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி குடும்ப அரசியல் நடத்துவதாக பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.