பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாமல் போகலாம்.. பா.ஜ.க.

 
பா.ஜ.க.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் போகலாம் என நான் உறுதியளிக்கிறேன் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. குலாப்சந்த் கட்டாரியா விமர்சனம் செய்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் அசோக் கெலாட்  2022-23ம் நிதியாண்டுக்கான அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த அண்டு முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அசோக் கெலாட்

அசோக் கெலாட் தாக்கல் செய்த பட்ஜெட்டை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவரும், எம்.எல்.ஏ.வுமான  சதீஷ் பூனியா கூறுகையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்த பட்ஜெட், கருப்பான மணமகளை அழகு நிலையத்துக்கு ஒப்பனை செய்து கொள்ள அழைத்து செல்வது போல் உள்ளது, அதனால் அவர் அழகாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

சதீஷ் பூனியா

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் குலாப்சந்த் கட்டாரியா கூறுகையில், அரசாங்கம் இன்று ஒன்றன் பின் ஒன்றாக வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பணம் எங்குள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். பட்ஜெட்டில்  மாநில அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாமல் போகலாம் என்று நான் உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.