குஜராத் மக்கள் காங்கிரஸை 27 ஆண்டுகளாக நிராகரித்து வருகின்றனர் வரும் தேர்தலிலும் நிராகரிப்பார்கள்.. பா.ஜ.க.
குஜராத் மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸை நிராகரித்து வருகின்றனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் காங்கிரஸை நிராகரிப்பார்கள் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் காந்திநகரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறியதாவது: ஒரு புறம் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் காங்கிரஸே உடைந்து கொண்டிருந்தது. கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யும் (ராகுல் காந்தி) இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நடத்துகிறார். ஆனால் குஜராத்தை ஒரங்கட்டுகிறார். இதற்கு காரணம் அவர் இதயத்தில் குஜராத்துக்கு இடமில்லை. அதனால்தான் அவர் இங்கு வர விரும்பவில்லை.
குஜராத் மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸை நிராகரித்து வருகின்றனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் காங்கிரஸை நிராகரிப்பார்கள். காங்கிரஸ் கட்சி இப்போது பைத்தியம் பிடித்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சுமார் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையில் குஜராத் மாநிலம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற உள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கியது. அதற்கு 2 நாள் முன்னதாக செப்டம்பர் 5ம் தேதியன்று ராகுல் காந்தி குஜராத் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.