குடியரசு தேர்தலில் போட்டியிட போவதில்லை.. கோபால்கிருஷ்ண காந்தியின் முடிவால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி

 
கோபால்கிருஷ்ண காந்தி

மகாத்மா காந்தியின்  பேரன் கோபால்கிருஷ்ணன் காந்தி, குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இது எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டின. ஆனால், குடியரசு தலைவர் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று சரத் பவார் அறிவித்தார்.

சரத் பவார்

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மற்றும் மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் மேற்கு வங்க கவர்னருமான கோபால்கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் பருக் அப்துல்லா நான் குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து எனது பெயரை மரியாதையுடன் திரும்ப பெறுகிறேன் என தெரிவித்தார். அதாவது நான் குடியரசு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக, கோபால்கிருஷண் காந்தியும், குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். 

பரூக் அப்துல்லா

இது தொடர்பாக கோபால்கிருஷ்ண காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குடியரசு மாளிகையின் மிக உயர்ந்த பதவிக்கு (குடியரசு தலைவர்)  எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் பல மதிப்புமிக்க தலைவர்கள் என்னை நினைத்து எனக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை ஆழமாகப பரிசீலித்தன் மூலம், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேசிய ஒருமித்த கருத்தையும், எதிர்கட்சி ஒற்றுமைக்கு அப்பாற்பட்டு தேசிய சூழலையும் உருவாக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை நான் காண்கிறேன். என்னை விட இதை சிறப்பாக செய்பவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதனால் அப்படிப்பட்ட ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தலைவர்களிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் 2வது சுற்று சந்திப்பு இன்று மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் சரத் பவார் தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.