பா.ஜ.க.வுக்கு தாவ தயாராகும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்?.. வேண்டுமென்றே வதந்தியை பரப்புகிறார்கள்- காங்கிரஸ்
கோவா சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு வேண்டுமென்றே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய போவதாக வதந்திகள் பரப்பபட்டுள்ளன என காங்கிரஸின் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 20 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிற 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. கோவா பா.ஜ.க.வின் பொறுப்பாளராக இருப்பவர் அந்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி.
கடந்த மே மாதம் கோவா பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி. ரவி பேட்டி ஒன்றில், தற்போது எங்களிடம் 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இது 30ஆக உயரும் என தெரிவித்தார். அது முதல் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ போவதாக ஊக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கோவா சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணையக்கூடும் என செய்தி வெளியானது.
ஆனால் இதனை கோவா காங்கிரஸ் மறுத்துள்ளது. கோவா காங்கிரஸின் மூத்த தலைவர் மைக்கேல் லோபோ இது குறித்து கூறுகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு வேண்டுமென்றே இந்த வதந்திகள் பரப்பபட்டுள்ளன. இதெல்லாம் வதந்திகள். அப்படி எதுவும் இல்லை. சட்டப்பேரவை தொடங்குகிறது மற்றும் ஒரு வதந்தியை யாரோ ஒருவர் அல்லது மற்றொருவர் பரப்ப வேண்டும். என்னிடம் சொல்லவில்லை, சொன்னால் முதலில் சொல்கிறேன் என தெரிவித்தார்.