முதல் வரிசையில் எடப்பாடி! தனி அறையில் ஓபிஎஸ்! முதலில் மேடையேற்றப்பட்டது யார்?

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் மேடை ஏற்றப்பட்டிருக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் எடப்பாடிக்கு பின்னர்தான் மேடையேற்றப்பட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது வரைக்கும் தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று சொல்லி ஓபிஎஸ் பொருளாளர் என்றும், எடப்பாடி தலைமை நிலைய செயலாளர் என்றும் அறிவிக்கப்பட்டதால் தனது ட்விட்டர் பக்க முகப்பையும் மாற்றி இருக்கிறார் எடப்பாடி.
ஓபிஎஸ் சொல்கிறபடியே பார்த்தாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைக்கு குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க முதலில் மேடை ஏற்றப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பின்னர் தான் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஓ .பன்னீர்செல்வம்.
இந்த கூட்டத்திலும் முதல் வரிசையில் சென்று அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தனி அறையில் அமர்ந்து காத்திருந்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம் இது அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழகத்திற்கு வந்தார். சென்னையில் தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்வில் எடப்பாடி - ஓபிஎஸ் ஒரே நேரத்தில் இணைந்து பங்கேற்பார்களா என்ற பேச்சு இருந்தது. அதற்கு வாய்ப்பே இல்லை இருவரும் தனித்தனியாக தான் சந்தித்து ஆதரவை தெரிவிப்பார்கள் என்றும் பேச்சு இருந்தது. அதன்படியே தான் இருவரும் தனித்தனியாக திரௌபதியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதில் யார் முதலில் மேடை ஏறினார்கள் என்பது குறித்து தான் அதிமுகவில் சலசலப்பு எழுந்திருக்கிறது. அதுதான் கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
தனது ஆதரவாளர்களுடன் வந்த எடப்பாடி பழனிச்சாமி முன்வரிசையில் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் ஓ .பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி அறையில் காத்திருந்திருக்கிறார். கே. பி. முனுசாமி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, செங்கோட்டையன் தமிழ் மகன் உசேன், ஜெயக்குமார், எஸ். பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலில் மேடை ஏறிச் சென்று திரௌபதிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர்தான் வைத்திலிங்கம் ,ஜேசிடி பிரபாகர், ரவீந்திரநாத் எம் பி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஓபிஎஸ் மேடைக்குச் சென்று இருக்கிறார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் ஓ .பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு பின்னர்தான் மேடை ஏறி இருக்கிறார். ஆனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தும் எடப்பாடி தான் ஓபிஎஸ்க்கு முன்னதாக மேடையில் இருக்கிறார். ஓபிஎஸ்க்கு முன்பாக எடப்பாடி முதலாவதாக மேடையற்றப்பட்டது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.