காங்கிரஸிலிருந்து வெளியேறிய கபில் சிபல்.. எங்கள் கட்சிக்கு மக்கள் வருவார்கள், செல்வார்கள்... கே.சி.வேணுகோபால்

 
மக்களை காட்டிலும் பசுக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளும் கட்சி…… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய கபில் சிபல்….

எங்கள் கட்சிக்கு மக்கள் வருவார்கள், செல்வார்கள் என காங்கிரஸிலிருந்து கபில் சிபல் வெளியேறியது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல் சமீபகாலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா காந்தி குடும்பம் விலகி, கட்சியை வழிநடத்த மற்ற தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிய ஜி 23 தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கபில் சிபல் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மேலும், சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன், உத்தர பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாடி எம்.பி. ராம் கோபால் யாதவ் உடன் இருந்தனர். 

கபில் சிபல், அகிலேஷ் யாதவ்

வேட்புமனு தாக்கல் செய்தபிறகு கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 16ம் தேதியே எனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டேன். எதிர்ப்பு குரல் சுதந்திரமாக இருப்பது முக்கியம். சுயேட்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். சுதந்திரமாக குரலாகவே இருக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும்போதே மோடி அரசை எதிர்க்கும் வகையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம் என தெரிவித்தார். கபில் சிபல் காங்கிரஸிலிருந்து வெளியேறியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: கபில் சிபலின் ராஜினாமா கடிதம் மிக உயர்ந்த தரத்தில் உள்ளது. காங்கிரஸ் விழுமியங்களை அவர் உறுதியாக நம்பியதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அவர் வேறொன்றும் சொல்லவில்லை. அவர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கட்டும். அப்புறம் சொல்லலாம். 

கே.சி.வேணுகோபால்

எங்கள் கட்சிக்கு மக்கள் வருவார்கள், செல்வார்கள். இது ஒரு பெரிய கட்சி. சிலர் கட்சியை விட்டு வெளியேறலாம், சிலர் வேறு கட்சிகளுக்கு செல்லலாம். கட்சியை விட்டு வெளியேறிய யாரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன். காங்கிரஸூக்கு பரந்த இடம் உள்ளது. காங்கிரஸ் முழுமையாக புனரமைக்கப்படும். இது ஒரு விரிவான மறுசீரமைப்புடன் செல்ல உத்தேசித்துள்ளது. நிறைய வழிகாட்டுதல்கள் வரப்போகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி இருக்கும். இந்த ஆட்சியில் (பா.ஜ..க ஆட்சியில்) அரசியல் எதிரிகளை ஒழிக்க, சி.பி.ஐ., உளவுத்துறை மற்றும் அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்துகிறது. இதுவரை எந்த அரசும் பயன்படுத்தாத கேடுகெட்ட முறைகளை பயன்படுத்தி மற்ற அரசியல் கட்சிகளை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வாழ்வது கடினம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, இதை முறியடிக்கும் வலிமை காங்கிரஸூக்கு உள்ளது. காங்கிரஸிலும் அதற்கான தலைவர்கள் உள்ளனர். ஆங்காங்கே தற்காலிக பின்னடைவுகள் ஏற்படும். பிரச்சினைகளை ஆய்வு செய்வோம். கட்சி பலப்படுத்தப்பட்டு, சிறப்பான முன்னோக்கி  கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.