ஆவேசமான அண்ணாமலை - நிருபர் மீது தாக்குதல்

 
a

பேட்டி கொடுக்க முடியாது .   பேட்டி கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்கு நான் ஒன்றும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று அண்ணாமலையின் ஆவேசமாக பதிலுக்கு,   ஆவேசமான அந்த நிருபர் அண்ணாமலையின் காரை தட்ட,  அங்கிருந்த பாஜகவினர் அந்த நிருபர் மீது கடும் தாக்குதல் நடத்த அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது போலீசாருக்கு.

மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி தமிழகத்தின் மாவட்டம்தோறும் பாஜகவினர் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  துணைத் தலைவர்கள் வி. பி. துரைசாமி , கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

 இந்த கூட்டத்திற்குப் பின்னர் மேடையை விட்டு கீழே இறங்கிய அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர்.   ஆனால் அண்ணாமலை பேட்டி கொடுக்காமல் நேரடியாக காரில் ஏறி புறப்படுவதாக திட்டம்.   இதை தெரிந்துகொண்ட செய்தியாளர்கள்,  அண்ணாமலையின் காருக்கு அருகே போய் நின்று கொண்டார்கள்.

am

 அப்போது காரில் ஏறி வந்த அண்ணாமலையிடம் பேட்டி ஏதும் இல்லையா என்று நிருபர்கள் கேட்க,  இப்போது பேட்டி எதுவும் இல்லை என்று சொல்லிக்கொண்டே காரில் ஏற முற்பட்டார் அண்ணாமலை.   உடனே ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபர்,    ஏன் இப்போது பேட்டி இல்லை? என்று கேட்க,   இப்போது எதற்காக பேட்டி கொடுக்கவில்லை என்று அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் திரும்பவும் கேட்க,    ஆவேசமான அண்ணாமலை,  ’’நான் ஒன்றும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை ’’என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார்.

உடனே ஆத்திரப்பட்ட அந்த செய்தியாளர் அண்ணாமலையின் காரை தட்டினார்.   பாஜகவினரும் மற்ற செய்தியாளர்களும் அண்ணாமலையின் கார் செல்ல வழி விட்டபோது,  அந்த செய்தியாளர் மட்டும் அண்ணாமலையின் கார் புறப்பட்ட ஆத்திரத்தில் அவரின் காரை தட்டி விட்டதால் அங்கிருந்த பாஜகவினர் அந்த நிருபர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்கள்.  அண்ணாமலையின் கார் வேகமாக பறந்து விட்டது.   இதைக்கண்டு பதறிய போலீசார் ஓடிவந்து அந்த நிருபரை மீட்டு அனுப்பி வைத்துவிட்டு,   பாஜகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.   இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.