50 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்டேன்.. பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர்

 
பா.ஜ.க.வில் இணைந்த சுனில் ஜாகரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் ஜே.பி. நட்டா

பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். 

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எஸ்.சி. தலைவராக குறிவைத்து பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு, சுனில் ஜாகரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தது.  காங்கிரஸின் இந்த நடவடிக்கை சுனில் ஜாகருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சில நாட்கள் அமைதியாக இருந்த சுனில் ஜாகர் கடந்த சனிக்கிழமையன்று காங்கிரஸிலிருந்து விலகினார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ்

இந்நிலையில நேற்று சுனில் ஜாகர் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் சுனில் ஜாகர் பா.ஜ.க.வில் இணைந்தார். சுனில் ஜாகரை வரவேற்று, ஜே.பி. நட்டா பேசுகையில், பா.ஜ.க.வுக்கு சுனில் ஜாகரை வரவேற்கிறேன். அவர் தனது அரசியல் வாழ்க்கையில் தனக்கென ஒரு பெயரை பெற்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர், பஞ்சாபில் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் பெரும் பங்கு வகிப்பார் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு சுனில் ஜாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்துள்ளோம். பஞ்சாபில் தேசியம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகிய பிரச்சினைகளில் காங்கிரஸூடான 50 ஆண்டு கால உறவை இன்று முறித்துக் கொண்டேன். நான் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை உணர்ந்த அன்றே காங்கிரஸூக்கு குட் பை சொன்னேன். பஞ்சாப்புக்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதை ஆவணங்களில் நான் அறிவேன். ஆனால் பஞ்சாப் மக்களின் இதய துடிப்பை புரிந்து கொண்டு பிரதமர் மோடி பஞ்சாபுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளார் என்பதை நான் உணர்கிறேன் என தெரிவித்தார்.