அந்த பணம் எனக்கு சொந்தமானது இல்லை.. மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி

 
பார்த்தா சட்டர்ஜி

அந்த பணம் (அபிர்தா முகர்ஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்) எனக்கு சொந்தமானது இல்லை என்று ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார். 

மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முதலில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்றது தெரியவந்ததால் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. அண்மையில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறை
பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து சுமார் ரூ.50 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல். மேலும், என் வீட்டில் உள்ள அனைத்து பணமும் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமானது என அர்பிதா முகர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல். பார்த்தா சட்டர்ஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாகி வருவதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் மற்றும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்.

பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில், முக்கிய குற்றவாளியான பார்த்தா சட்டர்ஜி நேற்று மருத்துவ பரிசோதனைக்காக கொல்கத்தாவில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் ஆசிரியர் நியமன முறைகேட்டின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தா சட்டர்ஜியிடம் கேட்டனர். அதற்கு பார்த்தா சட்டர்ஜி, நேரம் வரும் போது உங்களுக்கு தெரியும், அந்த பணம் (அபிர்தா முகர்ஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்) எனக்கு சொந்தமானது இல்லை என தெரிவித்தார்.