எனக்கு இப்போது 84 வயதாகிறது.. நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.. யஷ்வந்த் சின்ஹா

 
பிரதமராக இருந்துகொண்டு மூட நம்பிக்கையை வளர்க்கக் கூடாது! – பா.ஜ.க முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன், தனித்து இருப்பேன் என்று குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பா.ஜ.க.வில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த யஷ்வந்த் சின்ஹா, 2018ல் அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் யாரும் எதிர்பாராத வகையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மம்தா பானர்ஜி அவரை திரிணாமுல் காங்கிரஸின் தேசிய துணை தலைவராக நியமனம் செய்தார்.

பா.ஜ.க.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அந்த தேர்தலில் போட்டியிட்டார். குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். கடந்த திங்கட்கிழமையன்று திரௌபதி முர்மு நாட்டின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார்.

திரிணாமுல் காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில் யஷ்வந்த் சின்ஹா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது: நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன், நான் சுயேட்சையாக இருப்பேன். யாரும் என்னிடம் பேசவில்லை, நானும் யாருடனும் பேசவில்லை. திரிணாமுல் காங்கிரஸின் தலைவர் ஒருவருடன் தனிப்பட்ட அடிப்படையில் தொடர்பு கொண்டுள்ளேன். பொது வாழ்க்கையில் நான் என்ன பங்கை வகிப்பேன், எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பேன் என்பதை நான் பார்க்க வேண்டும். எனக்கு இப்போது 84 வயதாகிறது, எனவே இவை அனைத்தும் பிரச்சினைகள். நான் எவ்வளவு காலம் தொடர முடியும் என்பதை நான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.