பா.ஜ.க. மீதான கோபத்தில் காங்கிரஸில் நான் சேரவில்லை.. இமாச்சல பிரதேச பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா

 
காங்கிரஸில் இணைந்த கிமி ராம் சர்மா

இமாச்சல பிரதேச பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா நேற்று காங்கிரஸில் இணைந்தார்.

இமாச்சல பிரதேச பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா. பஞ்சார் மாவட்டத்தில் உள்ள குலு சட்டப்பேரவை தொகுதியிலிருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிமி ராம் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. 2017ல் நடைபெற்ற இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கிமி ராம் சர்மாவுக்கு பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

பா.ஜ.க.

இதனால் பா.ஜ.க. மீது கிமி ராம் சர்மா கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென கிமி ராம் சர்மா காங்கிரஸில் இணைந்தார். டெல்லியில் நேற்று இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா முன்னிலையில் கிமி ராம் சர்மா காங்கிரஸில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது, இமாச்சல பிரதேச காங்கிரஸின் இணைப் பொறுப்பாளர் குர்கீரத் சிங், இமாச்சல பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் சுதிர் சர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

கிமி ராம் சர்மா

காங்கிரஸில் இணைந்த பிறகு கிமி ராம் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு சுதந்திரம் அடைய உதவிய கட்சியில் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். பா.ஜ.க. மீதான கோபத்தில் நான் காங்கிரஸில் சேரவில்லை. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸை முன்னோக்கி கொண்டு செல்ல நான் நன்கு யோசித்து முடிவெடுத்துள்ளேன். ஊழல், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஊழியர்களின் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதால், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இந்த பிரச்சினைகளை மாநில மக்கள் முன் கொண்டு வந்து, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவுவோம் என தெரிவித்தார்.